Description
“ஓடுகாலி – சமூக நாவல்”
(ஆதி மொழியில் இருந்து அறவே நீக்க வேண்டிய சொற்களில் ஒன்று.)
எழுத்தாளன் என்பவன் பெயர்,புகழ், பணத்திற்காக மட்டும் எழுதுவானானால், நிச்சயம் அவன் உண்மையான எழுத்தாளனாக இருக்க முடியாது.
எழுத்து என்னும் சக்தியை சரியான பாதையில் எழுத்தாளன் பயன்படுத்த வேண்டும்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து நாவல்களிலும் அது நடக்குமா என்று தெரியாது.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையும் போது, அதனை எழுத்தாளன் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த வாய்ப்பு எனக்கு இந்த நாவலில் கிடைத்திருக்கிறது.
அதனை என்னால் முடிந்தவரை நான் சரியாக பயன்படுத்த முயன்றிருக்கிறேன்.
ஒரு எழுத்தாளனாக இந்த சமூகத்திற்கு நான் செய்த சிறிய கடமையாக அல்லது என்னால் முடிந்த சிறிய மாற்றத்திற்கான ஆரம்பப் புள்ளியாக இந்த நாவலை உங்கள் கரங்களில் கொடுக்கிறேன்.
இந்த நாவலில் வரக்கூடிய கதைமாந்தர்களின் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. இந்த நாவல் நடக்கக்கூடிய காலகட்டம், இடங்கள் அனைத்தும் உண்மைக்கு நெருக்கமாக இருப்பினும், இந்தச் சம்பவங்கள் அந்த இடங்களில் அந்த காலத்தில் உண்மையாக நடக்கவில்லை.
நான் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் இந்த நாவலின் நிகழ்விடமாக சென்னையை அமைத்துக் கொண்டால் எளிமையாக எழுத முடியும் என்பதற்காகவே மொத்த கதையையும் சென்னையில் நடந்து போல எழுதியிருக்கிறேன்.
தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த உண்மையான மூன்று சம்பவங்களை கருவாக கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.
கதை நிகழும் காலக்கட்டத்தை வாசக உறவுகளுக்கு தெரியப்படுத்த புது முயற்சியாக தமிழக அரசியலையும், சினிமாவையும் இந்நாவலில் பயன்படுத்தி இருக்கிறேன்.
இந்த நாவலில் நீங்கள் படிக்கும் அனைத்தும் உண்மை அல்ல என்றாலும், நாவலுக்குள் பல உண்மைகள் இருக்கின்றன.
ஏதேனும் ஒரு வட்டார வழக்கு நாவலுக்குள் இருந்தால் இன்னும் சுவை கூடும் என்பதால், நான் அறிந்த… நான் கேட்டு வளர்ந்த சென்னை வட்டார வழக்கு மொழியிலேயே இந்த நாவலை எழுதி இருக்கிறேன்.
இந்த நாவலில் இன்று நாம் கெட்ட வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய பல வார்த்தைகள் இடம் பெற்றிருக்கிறது.
அவற்றை வேண்டும் என்று நாவலில் நான் திணிக்கவில்லை, கதையின் ஓட்டத்தில் தானாக அமைந்துவிட்டது.
அவை அந்த காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்தவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் எதார்த்தமாக அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்கின்ற போது என்னவெல்லாம் பேசுவார்களோ… அதை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே அந்த வார்த்தைகளை நான் பயன்படுத்தி இருக்கிறேன்.
மிகவும் முக்கியமான விஷயம் இந்த நாவல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படிக்க வேண்டும்.
நிச்சயம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.
நான் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு முதுகெலும்பாக இருந்து தொடர்ந்து எனது நாவல்களை வெளியீடு செய்யும் கௌரா பதிப்பகத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து என்னை ஆதரித்து அன்பினை அளவுக் கடந்து அளிக்கும் அனைத்து உறவுகளுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்.
கௌரா பதிப்பகம் வெளியீடாக நாளை வெளியாகவிருக்கும் ஓடுகாலி நாவலை வாசக உறவுகளாகிய நீங்கள் வாசித்து நாவலுக்குள் சென்று வாழ்ந்து, முடிந்தால் வெளியே வந்து உங்களது கருத்துக்களைப் பகிருங்கள்.
என்றும் அன்புடன் ஸ்ரீமதி…
Reviews
There are no reviews yet.