Description
“எனக்கு நினைவுதெரிந்த நாள் முதல் நான் என் அப்பாவின் கால்களைக் கவனித்தபடியே வந்திருக்கிறேன். அப்பாவைப் பற்றிய ஒவ்வொரு நினைவையும் நான் அவரின் கால்களை முன்வைத்தே என் மனத்துக்குள் பதிந்திருக்கிறேன். எனக்குள் இருக்கும். என் அப்பாவின் நினைவுகளை நான் ஒவ்வொரு முறையும் நினைத்து, மீட்டிப் பார்க்கும் போதெல்லாம் என் அப்பாவின் கால்கள்தான் என் அகவிழிக்கு முன் வந்து நிற்கின்றன. நான், என் அப்பாவை அவரின் கால்களின் வழியாகவே அறிகிறேன். நான் அவரின் கால்களை என் நினைவில் சுமந்து கொண்டிருக்கிறேன்.
அவரின் கால்கள் நடந்த பாதைகளையே நான் என் வாழ்க்கைப் பயணத்தின் பாதைகளாக ஏற்றுக்கொண்டுள்ளேன். அவர் நடந்த பாதைகளில் நான் என் கால்களை அழுத்தமாக ஊன்றி ஊன்றி நடக்கிறேன் அவர் வழியில் செல்ல எனக்கு இதுவே சிறந்த வழி என்பதால். அவரின் வழிகள் எப்போதும் நேர்வழிகள்தான். அவரின் கால்கள், ஒருபோதும் குறுக்குவழிகளைத் தேர்ந்தெடுக்கவே இல்லை. அவரின் பாதைகள் என்றும் குறுகிய சந்தாகவோ, தெருவாகவோ இருந்ததே இல்லை. அவரின் பாதைகளில் முட்டுச்சந்துகள் எதிர்ப்பட்டதே இல்லை. அவரின் பாதைகள் செல்ல செல்ல விரிந்து, படர்ந்து, நீண்டுகொண்டே இருந்தன.
– அவரின் பாதைகள் என்றும் எப்போதும் பெருவழிகளிலேயே சென்று சென்று இயல் பாக இணைந்தன. அவரின் பாதைகள் ஒருபோதும் முற்றுப் பெறவே இல்லை. அப்பா தனக்கான பாதையைத் தானே தேர்ந்துகொண்டார். நான் அவரின் பாதையைப் பின்பற்றிக் கொண்டேன். அவர் நடந்த பாதையில் நான் செல்வதால், ‘அவர் எப்போதும் எனக்கு முன்பாகச் சென்று கொண்டிருக்கிறார்’ என்ற ஆறுதல், எனக்கு என்றுமே இருக்கும். இதுபோதுமே! இதைவிட வேறு எந்த ஆறுதல் எனக்கு வேண்டும்?”
Reviews
There are no reviews yet.