Description

இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore)  மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார்.19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும். தாகூரின் படைப்புகள் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது. சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன என்ற பாடலை இயற்றியவரும் இவரேயாவார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது