Description

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவன் மனதில் தோன்றும் ஆசைகளால், லட்சியங்களால், வேட்கைகளால் செலுத்தப்படுகின்றது. சிலருக்கு பணம், சிலருக்கு பதவி, சிலருக்கு புகழ், சிலருக்கு பிரபலமாயிருப்பது, சிலருக்கு காதல், சிலருக்கு வெளிநாட்டு வாழ்க்கை என்று மனதை இழுக்கும் காந்தம் ஒவ்வொருவருக்கும் வேறுவேறாகத்தான் இருக்கிறது. இதில் பணம் என்னும் காந்தமும், அது தரும் வசதிகளும், உலகம் அதற்குத்தரும் மதிப்பும் சற்று அதிகம் தான்.

பணம் வாழ்க்கைக்குத் தேவைதான். தேவைகள் நிறைவேறிய பின்பும் பணம் என்னும் காந்தம் மனதை திருப்தி அடைய விடுவதேயில்லை. இன்னும் இன்னும் என்று மேலும் கழுத்தைப் பிடித்துத் தள்ளி, வாழ்வின் முக்கிய விஷயங்களைக்கூட கவனிக்கவிடாமல் செய்து, வாழ்வின் திசையை மாற்றிவிடுகிறது.

வாழ்க்கையில் நான் பார்த்த, பழகிய, சந்தித்த, பாதித்த மனிதர்களிடம் இருந்த காந்தங்களை, சுபாவங்களை மட்டும் எடுத்துக் கொண்டு  குனசித்திரங்களாக வடித்து புனையப்பட்டதுதான் இந்த காந்தமுள்.