Description
தொல்காப்பியம் (ஆங்கிலம்:Tolkappiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்பாப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.
தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
எழுத்ததிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.
முதலாவதாக உள்ள நூன்மரபு என்னும் இயலில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துகளைப் பற்றிய செய்திகள் உள்ளன. எழுத்துகளின் தொகுப்புப்பெயர்கள், எந்த எழுத்தோடு எந்த எழுத்து சேரும் என்பன போன்ற செய்திகள் இதில் சொல்லப்படுகின்றன.
இரண்டாவதாக உள்ள மொழிமரபு என்னும் இயலில் சார்பெழுத்துகளைப் பற்றிய விளக்கமும் சொல் தொடங்கும் எழுத்துகள், சொல்லில் முடியும் எழுத்துகள் பற்றிய செய்திகளும் உள்ளன.
மூன்றாவதாக உள்ள பிறப்பியலில் எழுத்துகளின் ஒலி எவ்வாறு எந்தெந்த உறுப்புகளில் பிறக்கும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன.
நான்காவதாக உள்ள புணரியலில் நின்ற சொல்லின் இறுதி எழுத்தோடு வருகின்ற மொழியின் முதலெழுத்து எவ்வாறு புணரும் என்று விளக்கப்படுகிறது. இயல்பு, திரிபு, சாரியை பெறுதல் முதலானவை சொற்கள் புணரும்போது நிகழும் பாங்கு இதில் கூறப்படுகிறது.
ஐந்தாவதாக உள்ள தொகைமரபு என்னும் இயலில் வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சி முதலானவை விளக்கப்படுகின்றன.
ஆறாவதாக உள்ள உருபியலில் எந்தெந்த எழுத்தின் இறுதியில் எந்தெந்த சாரியைகள் இணைந்து புணரும் என்று விளக்கப்படுகிறது.
ஏழாவதாக உள்ள உயிர்மயங்கியலில், உயிரெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
எட்டாவதாக உள்ள புள்ளிமயங்கியலில் மெய்யெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
ஒன்பதாவதாக உள்ள குற்றியலுகரப் புணரியலில் குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
இப்படி எழுத்து, மொழி(word), புணர்மொழி(combination of words) ஆகிய மொழிக்கூறுகள் எழுத்ததிகாரத்தில் விளக்கப்படுகின்றன.








Reviews
There are no reviews yet.