Description
“பொன்னை உருக்கி வடித்திட்ட தேர் ஒன்று
பூமியில் ஊர்வலம் வந்ததுவோ ?
கன்னல் சுவையையும் கற்கண்டையும் கொட்டிக்
காய்ச்சித் திரட்டிய தேன்பாகோ? ”
என எண்ணும்படி அமைந்துள்ளது பாவலர் முனைவர் வடிவேலனாரின் இந்த “அண்ணன்மார் சுவாமி” வீர வரலாற்றுக் கதை. உடுக்கடிப் பாடலாக ஓலைச் சுவடியில் கிடந்த இந்தக் கதையை என் ஊர்ப் பெரியவர்கள் – கல்வெட்டுப்பாளையம் மக்கள் தங்கள் கைப்பட நகல் எழுதி அச்சிடுமாறு என்னைப் பணித்தார்கள்.
நாட்டுப்புற இலக்கியம் தோன்றுவதற்கான அடிப்படை நாட்டுப்புற வாழ்க்கை. அதைதான் கிராமியக்கலைஞர்கள் பாடல்களாகப் பாடி செவி வழியாகப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். ஒலி வடிவில் பாடப்பட்டு அவை வட்டார மொழிகளில் பாடல்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழில் காவியங்கள் இருப்பதைப் போலவே பல நாட்டுப்புறப் பாடல்களும் உண்டு. இவை பெரும்பாலும் அம்மானை வடிவில் அமைந்தவை. பாடிப் படிப்பதற்கு எளிமையானவை. இவற்றில் கொங்கு நாட்டில் வழங்கிய ஒரு வீர வரலாற்றின் வடிவம்தான் அண்ணன்மார் சுவாமி கதை. பொன்னழகர் என்றும் கள்ளழகர் அம்மானை என்றும் குன்றுடையான் கதை என்றும் மக்கள் நாவில் தவழ்ந்து வந்த கதை இது.