Description
நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட ‘இன்னா’, இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன. இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகளைக் கொண்டு, ஒவ்வொன்றையும் ‘இன்னா’ என எடுத்துக் கூறுதலின் ‘இன்னா நாற்பது’ எனப் பெயர்பெற்றது.
இனியவை நாற்பது கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், ‘ஊரும் கலிமா’ எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண்பாவினால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது. வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து ‘இனிது’ என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது ‘இனியவை நாற்பது’ எனப்பட்டது. இதனை ‘இனிது நாற்பது’, ‘இனியது நாற்பது’, ‘இனிய நாற்பது’ என்றும் உரைப்பர்.





Reviews
There are no reviews yet.