Description
தமிழ் மொழியின் இலக்கிய வளங்களுக்குப் பிற்காலச் சிற்றிலக்கியங்களும் தூண்டுகோலாக அமைந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டில் மிகப்பலவாக விரிந்து சிறுகதை, நாடகம், கவிதை, நாவல், குறுங்கதை, பல்வேறு துறை சார்ந்த இலக்கியங்கள் எனக் கவிதையிலும், உரைநடையிலும் அமைந்து வளமூட்டின. அதற்கு பல்வேறு தமிழ் அறிஞர்களின்
இலக்கிய வாணர்களின் எண்ணங்களும், எழுத்துகளும் வளம் சேர்த்தன. அந்த நிலையில் அறிஞர் அண்ணாவின் எழுத்தோவியங்கள் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்க வைத்து மூடத்தனங்களை மூலையில் எறிய வைத்துப் புதிய உணர்வுகள்
ஊட்டிய எழுத்து நடையை உருவாக்கின. சமுதாயத்தைச் சல்லடைக் கண்கொண்டு உற்றுநோக்கி அவற்றின் மேம்பாட்டுக்காக தம் எழுத்துகளைப் பயன்படுத்தினார். அப்படிக் காதல் உணர்வுகளைச் சாதிய சமய இன பேதமின்றி வெளிப்படுத்தும் வகையில் ஓர் இரவில் எழுதப்பட்ட நாடகமே “ஓர் இரவு” என்னும் இந்த நாடக நூல். பல்வேறு மனப்போராட்டங்களுக்கிடையே சேகர், சுசீலா காதல் வெற்றி பெறுவதே இந்த நாடகம்.
ஓர் இரவு என்னும் இந்த நூலை அறிஞர் அண்ணா சமுதாய நோக்கத்துடன் சீர்திருத்தக் கருத்துகளை விதைக்கும் சிந்தனை விருந்தாகப் படைத்துள்ளார். பல்லாண்டுகளாகப் பதியமாகியுள்ள பண்பாட்டு வார்ப்புகளை உருவாக்கிப் பலமான அடித்தளம் அமைத்த பெருமை அறிஞர் அண்ணாவுக்கு உண்டு. அதற்குத் துணை நின்றவை அவருடைய இலக்கியப் படைப்புகள் என்றால் மிகையன்று.







Reviews
There are no reviews yet.