Description
பண்டைக் காலத்தில் நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட செய்திகள் கற்களில் வெட்டப்பட்டன. இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது. பெரும்பாலும், மன்னர்களின் ஆணைகள், அவர்கள் செய்த பணிகள் போன்றவை கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டன. இவை தவிர வீரர்கள், பிரபுக்கள், அதிகாரிகள் போன்றோர் தொடர்பிலும், முக்கிய நிகழ்வுகள் தொடர்பிலும் கல்வெட்டுக்கள் உள்ளன.
கல்வெட்டுக்கள், பெரும்பாலும் பொதுமக்கள் பார்ப்பதற்காக வெட்டப்படுவதால் இவை பொது இடங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. கோயில்கள், குகைகள், பொது மண்டபங்கள், வெற்றித் தூண்கள், நடுகற்கள் எனப்படும் இறந்தோர் நினைவுக் கற்கள் என்பவற்றில் கல்வெட்டுகளைக் காணலாம். கல்வெட்டு பொறிக்கும் வழக்கம் உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வுகள் இறந்துபட்ட அல்லது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மொழிகளிலுமான கல்வெட்டுக்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன.
கல்வெட்டுக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை. ஆதலால், மிகப் பழங்கால வரலாற்றுச் செய்திகள், நிகழ்வுகளுக்கான நம்பகமான சான்றுகளாக இவை திகழ்கின்றன. பல கல்வெட்டுக்கள் ஒரு மொழியில் மட்டுமின்றி, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளிலும் ஒரே செய்தியைக் குறிக்கும்படி அமைந்துள்ளன. இத்தகைய கல்வெட்டுக்கள் வழக்கொழிந்து மறக்கப்பட்டுவிட்ட மொழிகள் பலவற்றை வாசித்து அறியவும் அவற்றை மீட்டுருவாக்கம் செய்யவும் உதவுகின்றன. பண்டைய எகிப்திய மொழி இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதே. பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கல்வெட்டுக்களை ஆய்வு செய்வதன் மூலம் எழுத்துக்களின் படிமுறை வளர்ச்சிகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.
Reviews
There are no reviews yet.