Description
தொல்காப்பியம் (ஆங்கிலம்:Tolkappiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்பாப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.
தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சொல்லதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.
முதலாவது கிளவியாக்கம் என்னும் இயலில் தமிழ்ச் சொற்றொடர் வாக்கியமாக அமையும் பாங்கு கூறப்படுகிறது.
இரண்டாவது வேற்றுமையியலில் வேற்றுமை உருபுகள் இன்னின்ன கருத்துகளைப் புலப்படுத்திக்கொண்டு சொற்றொடராக அமையும் என்பது விளக்கப்படுகிறது.
மூன்றாவது வேற்றுமை மயங்கியலில் 2, 3, 4, 5, 6, 7 வேற்றுமை உருபுகள் உருவில் திரிந்தும் பொருளில் வேறுபட்டும் நிற்கும் இடங்கள் எவை என விளக்கப்படுகிறது.
நான்காவது விளிமரபு என்னும் இயலில் 8-ஆம் வேற்றுமையாக எந்தப் பெயர்ச்சொல் எவ்வாறு மாற்றம் கொள்ளும் என்பது விளக்கப்படுகிறது.
ஐந்தாவது பெயரியலில் பெயர்ச்சொற்கள் தோன்றுமாறும் அவை ஒருமை, பன்மை என்னும் எண்ணைப் புலப்படுத்தும்போதும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் இடத்தைப் புலப்படுத்தும்போதும் எவ்வாறு அமையும் என்பது விளக்கப்படுகிறது.
ஆறாவது வினையியலில் வினைச்சொற்கள் காலம் காட்டும் பாங்கும் ஐம்பால் மூவிடங்களில் ஈறுகள் கொள்ளும் பாங்கும் எச்சங்களாகத் திரியும் பாங்கும் விளக்கப்படுகின்றன.
ஏழாவது இடையியலில் பெயரையும் வினையையும் கூட்டுவிக்க இடையில் வந்தமையும் இடைச்சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
எட்டாவது உரியியலில் பெயருக்கும், வினைக்கும் உரிமை பூண்ட உரிச்சொறகள் எடுத்துக் காட்டப்பட்டு அவை உணர்த்தும் பொருள்கள் இவை என்பதும் சொல்லப்படுகிறது.
ஒன்பதாவது எச்சவியலில்
- இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாடுகளும்,
- பெயரெச்சம், வினையெச்சம், சொல்லெச்சம் பிரிநிலையெச்சம், எதிர்மறை எச்சம், ஒழியிசை எச்சம், உம்மை எச்சம், என-என்னும் எச்சம் முதலானவை பற்றிய விளக்கங்களும்,
- ஈ, தா, கொடு ஆகிய சொற்களின் சிறப்புப்பொருள்களும்,
- இடக்கரடக்கல், குறைசொற்கிளவி பற்றிய விளக்கங்களும்,
- காலமயக்கம், ஒருமை-பன்மை மயக்கம் பற்றிய பல்வகை மொழிக்கூறுகளும்
விளக்கப்பட்டுள்ளன.
-
- இவற்றுக்கு இடையே நிரல்நிறை, சுண்ணம், அடிமறி-மாற்று, மொழிமாற்று ஆகிய செய்யுளின் பொருள்கோள் வகை புகுந்துள்ளது விந்தையே.
மொத்தத்தில் சொல்லதிகாரம் மொழியின் வாக்கிய அமைப்பைக் (Syntax) கூறுகிறது எனலாம்.








Reviews
There are no reviews yet.