Description
நா. பார்த்தசாரதி அவர்கள் நாவல்களின் மூலம் தன்னை ஒரு புனைவியல் வாதியாக கட்டிக் கொண்டவர். ஆனால் குறு நாவல்களின் மூலம் தன்னை ஒரு யதார்த்தவாதியாக இனம் காட்டிக் கொள்வதைக் காணமுடிகிறது.
“ஒரு வழிகாட்டிக்குத் தன் வழி தெரியவில்லை ” எனும் நாவல் இந்த காலத்தில் படித்த இளைஞர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு உத்தரவாதம் இன்றி இருக்கிறது என்பதையும் வாழ்க்கையின் பொறுப்புகளுக்கும் வாலிபத்தின் சுதந்திரத்திற்கும் இடையே அவர்கள் எவ்வாறு ஊசல் ஆடுகிறார்கள் என்பதையும் அழகுற காட்டுகிறது.
“இலையுதிர் காலத்து இரவுகள் ” எனும் நாவல் வயதில் முதிர்ந்த ஒரு நடிகையின் மனப்போராட்டத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கதைக்குள் கதை எனும் பாணியில் இந்தக் கதைக்குள் ஆசிரியர் எழுதிய “பிரதிபிம்பம்” எனும் சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.
‘இன்று புதிதாய் பிறந்தோம் ‘, ‘தூங்கும் நினைவுகள்’, ‘வரவேற்பு’, ‘ஒப்புரவு ‘ உள்ளிட்ட குறுநாவல்களும் நா.பா.வின் கலை மனதை முழுமையாக வெளிப்படுத்தும் சிறந்த படைப்புகளாகும்.
நா.பா. தனது தனது மொழிநடையின் மூலம் எழுத்துலகில் மாபெரும் வெற்றியை அடைந்தவர்.அவர் கவித்துவம் நிறைந்த உரைநடை மேற்கொண்டது மட்டுமல்லாமல் தனது படைப்புகளில் கவிஞர்களையும் கவிதைகளையும் பெருமளவில் உலவவிடுள்ளார்.
அவரின் நாவல்களை படித்தவுடனேயே மனதில் படிந்து மனப்பாடமாகிச் சிந்தனையைக் கிளறிவிடுவது போல செறிவோடும் அழகோடும் வாக்கியங்களை அமைப்பதில் வல்லவர். அவர் எழுதிய வாக்கியங்கள் நம் மனதில் பொன்மொழிகள் போல பதிவதை இந்நாவலை சுவைப்பதன் மூலம் அறியலாம்.