Description
பள்ளு இலக்கியங்கள், உழவர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறும் சிறப்பினவாகத் திகழ்கின்றன. பரம்பரையாகப் பள்ளன் ஒருவன் பண்ணை ஒன்றில் பண்ணைத் தொழில் செய்து வருகிறான். அவனுக்கு இரண்டு மனைவியர்கள் உண்டு. அவர்கள் மூத்தபள்ளி இளையபள்ளி எனப்படுகின்றனர். இளையபள்ளியின் எழிலில் ஈடுபட்டிருக்கும் பள்ளன் மூத்த பள்ளியைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். இவ்வாறான சூழ்நிலையில் கார்காலம் தொடங்கி மழை பெய்ய, ஆற்றில் வெள்ளம் வருகிறது. பள்ளனின் நடவடிக்கையில் வெறுப்புற்ற மூத்தபள்ளி பண்ணைக்காரனிடம் சென்று பள்ளன் வேலையை மறந்து இளையபள்ளியின் வீட்டில் குடியாகக் கிடப்பதைக் கூறுகின்றாள். பண்ணைக்காரன் பள்ளனின் மோகத்திற்குக் காரணமான இளையபள்ளியின் மீது கோபம் கொள்கிறான். அப்போது கிடையில் இருந்து வருவதுபோலப் பாவனை செய்து பள்ளன் வருகிறான். பண்ணையில் நடைபெறும் வேலைகளைக் கூறுமாறு பள்ளனிடம் பண்ணைக்காரன் கேட்க; பள்ளன் விதைவகை, மாட்டுவகை, ஏர்-கலப்பை வகை முதலியவற்றைக் கூறுகிறான். பண்ணைக்காரன் கூறியபடி வயலில் கிடை அமைக்கும் பொருட்டு இடையர்களை அழைத்துவரச் சொல்ல, பள்ளன் அவர்களை அழைத்து வருகிறான். கிடை அமைக்கக் கூறிவிட்டு மீண்டும் இளையபள்ளியின் வீட்டுக்குச் சென்று விடுகிறான். மூத்தபள்ளி மீண்டும் பண்ணைக்காரனிடம் தன்னுடைய செயல்பாடுகளைக் கூறியதை அறிந்து பண்ணையில் வேலைகளைச் செய்வதுபோல நடிக்கிறான். பண்ணைக்காரன் பள்ளனைக் கவனித்துத் தன்னை அவன் ஏமாற்றுகிறான் என்பதை அறிந்து அவனைத் தொழுவில் மாட்டுகிறான். பள்ளன் படுகின்ற துன்பத்தைப் பொறுக்க இயலாத மூத்த பள்ளி தன்னைப் பிணையாக வைத்து அவனை மீட்கிறாள். தொழுவில் இருந்து விடுவிக்கப்பட்ட பள்ளன் உழவுப் பணியைத் தொடங்குகிறான். உழவுக் காலத்தில் பள்ளனை மாடு முட்டுகிறது.
அதனால் மயங்கி விழுந்த அவனைக் கண்ட பள்ளியர்கள் இருவரும் துன்புறுகின்றனர். அவன் மயக்கம் தெளிந்து எழுந்து
வேலையைக் கவனிக்கிறான். நாற்றுநடுதல், நீர்கட்டல், களைஎடுத்தல் முதலான பணிகள் நடைபெறுகின்றன. பயிர் விளைகிறது. பள்ளன் வேலை செய்தோர்களுக் கெல்லாம் அறுவடையின் பின்னர் நெல் அளக்கிறான். பள்ளன் இளையபள்ளிக்கு அதிகமாக நெல் அளப்பதைக் கண்டு மூத்தபள்ளி பள்ளிகளிடம் குற்றச்சாட்டு வைக்கிறாள். அதனைத் தொடர்ந்து பள்ளியர்கள் இருவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இறுதியில் இருவரும் சமாதானம் அடைந்து பாட்டுடைத் தலைவனை வாழ்த்திப்பாடிப் பள்ளனோடு ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துகின்றனர்.
பள்ளு இலக்கியங்களுள் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுவது முக்கூடற்பள்ளு. முக்கூடலில் கோயில் கொண்டிருக்கும் அழகர்மீது பாடப்பட்டது. முக்கூடல் என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடமாகும். தாமிரபரணி நதியோடு சிற்றாறும் கயத்தாறும் கூடும் இடமே முக்கூடல் என வழங்கப்படுகிறது. முக்கூடற்பள்ளு திருமால் கருடாழ்வார், சேனைகள், நம்மாழ்வார் ஆகியோரைக் கடவுளர்களாகக் கொண்டு வாழ்த்தித் தொடங்குகிறது.








Reviews
There are no reviews yet.