Description

மொகெஞ்சதாரோ (Mohenjo-daroமொஹெஞ்சதாரோ) என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிந்துவெளியில் அமைந்திருந்த நகரங்களில் மிகவும் பெரியது எனப்படும் இந்நகரம், அக்காலத்தில் தெற்காசியாவின் முக்கியமான நகரமாகவும் விளங்கியது.

இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந்நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது.எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்றது.

இது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை (conservation) நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது.