Description
இலக்கியம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பிறகே, இலக்கணம் தோன்றியது. இலக்கணமும் பல்வேறு
இலக்கணங்கள் – பல்வேறு அறிஞரால் இயற்றப்பெற்று நாட்டில் நிலவியிருக்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கின்ற முதல் இலக்கண நூலும் ஏன் உலகத்துக்கே முதல் இலக்கண நூலுமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற தொல்காப்பியத்திலேயே என்மனார் புலவர், என்ப, என்றிசினோர் என்றெல்லாம் குறிக்கப் பெற்றுள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் கூறப்பெற்றுள்ள செய்யுளியலை அடியொற்றியே அவிநயனார், காக்கைப் பாடினியார், சிறு காக்கைப்பாடினியார்,; கையனார், நத்தத்தனார் பல்காயனார், பல்காப்பியனார், மயேச்சுரர் முதலானோர் யாப்பிலக்கணங்களை இயற்றியளித்தனர்.
அவர்க்குப் பிறகு அமிர்தசாகரரால் யாப்பருங்கலமும், யாப்பருங்கலக்காரிகையும் இயற்றி அளிக்கப்பெற்றன. யாத்தல்
என்பது கட்டுதல், யாப்பு என்பது செய்யுள். அருங்கலம் என்பது அணிகலன். காரிகை என்பது அழகான பெண், கட்டளைக்
கலித்துறை என இருபொருள்கள் படும். யாப்பருங்கலக்காரிகை “காக்கைப்பாடினியம்” என்னும் யாப்பிலக்கண நூலைப் பின்பற்றி இயற்றப்பெற்றது. மகடூஉ முன்னிலையில் பாடப்பெற்றது என்பதனாலும் கட்டளைக் கலித்துறையாற் பாடப்பெற்றது என்பதனாலும் இந்நூல், காரிகை என்னும் முடிவினைப் பெற்றது. யாப்பு என்னும் காரிகைக்கு அணிகலனாகச் சூட்டப்பெற்றது என்றும்; தமிழ் என்னுங் காரிகைக்குச் சூட்டப்பெற்ற யாப்பு என்னும் அணிகலன் என்றும் பொருள் கொள்ளலாம்.








Reviews
There are no reviews yet.