Description
மூவலூர் ராமாமிர்தம் (1883 – 1962) தமிழகத்தைச் சேர்ந்த ஓர் பெண் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், முன்னாள் தேவதாசி ஒழிப்பு இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்.
இவர் திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள “பாலூர்” என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் வளர்ந்தது மூவலூர் கிராமம் இதனால் இவர் மூவலூர் இராமாமிர்தம் என்று அழைக்கப்படுகிறார்.
இவர் சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். 1936 இல் வெளியான இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. முதலில் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராக இருந்த இவர் 1925 இல் பெரியார் (ஈ. வெ. ராமசாமி) காங்கிரசிலிருந்து விலகியபோது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். 1930 இல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார். ஆனால் அச்சமயம் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். நவம்பர் 1938 இல் அதற்காக ஆறு வாரங்கள் சிறையிலடைக்கப்பட்டார். அவரது புதினம் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் தேவதாசி முறையை ஒழிக்க அவர் மேற்கொண்ட தொடர் பிரச்சாரங்களும் சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற வழிவகுத்தன. அச்சட்டம் 1947லிருந்து தேவதாசி முறையை ஒழித்தது. 1949 இல் பெரியார் மணியம்மை திருமணம் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அண்ணாத்துரை திராவிடர் கழகத்தை விட்டு விலகும் போது அவருடன் இராமாமிர்தம் அம்மையாரும் திராவிடர் கழகத்தை விட்டுவிலகினார். அதன்பிறகு சி. என். அண்ணாத்துரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளரானார். 27.06.1962 இல் அவர் காலமாகும்வரை தி.மு. க ஆதரவாளராகவே இருந்தார். 1989-ஆம் ஆண்டு கலைஞர் திரு.மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 8-ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதி தொகை ரூபாய் 5000-த்தை 15000 பெண்களுக்கு வழங்க முடிவு செய்தது அதற்கு அம்மையாரின் நினைவாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்று பெயரிடப்பட்டது.
Reviews
There are no reviews yet.