Description
தமிழகத்தை ஆட்சி செய்த பல்லவப் பேரரசர்கள் காலத்திலும் பின் எழுந்த சோழப் பேரரசுக் காலத்திலும் முற்காலப்பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். களப்பிரரை ஒழித்து, பாண்டியன் கடுங்கோன் (கி.பி. 560 – 590) என்பவனால் தொடங்கப்பெற்றது முற்காலப் பாண்டியர் ஆட்சி. இவர்களுள் எட்டாவது நூற்றாண்டில் தன் தந்தையாகிய கோச்சடையான் விரித்து எடுத்த ஆட்சிப் பரப்பைக் குன்றாமல் செழிப்புற ஆட்சி செய்த பராங்குசன் மாறவர்மனைப் பற்றியும் அவன் நிகழ்த்திய போர்களைப் பற்றியுமாகச் சுவைபட விரிகிறது இந் நாவல்.
இவனது ஆட்சிக் காலத்தில் பல்லவம், கங்கம், ராஷ்டகூடம், சாளுக்கியம் என ஒன்றுடன் ஒன்று இணைந்தும் மாறுபட்டும் விளங்குவதை இந்த நாவல் காட்டுகிறது. இவன் பல்லவர்களுடன் போர் புரிந்த போது, வெற்றி தோல்வி என்பது மாறி மாறி நிகழ்ந்ததையும், சாளுக்கியர்களுடன் நிகழ்த்திய போரையும் விவரிக்கும் இந்நாவல், அன்பு, காதல், பக்தி, நகைச்சுவை, வரலாறு என அனைத்தும் கலந்து சுவை சேர்க்கிறது. வைணவ சமயத்தைச் சார்ந்தவனாக இருந்த போதிலும், சைவக் கோயில்களுக்கும் இவன் பல தொண்டுகளைச் செய்துள்ளான். திருமங்கை ஆழ்வார் இவனது காலத்தவர்.
இவர் இவனைப் பற்றிப் பாடியுள்ளார். வேள்விக்குடி செப்பேட்டிலும், கொடுமுடி கல்வெட்டிலும் இவனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அரசர்கள் வாழ்வில் போர் என்பது தவிர்க்க முடியாத நிகழ்வு என்றாலும், அதில் நெறி தவறாது, பக்தியில் சிறந்து விளங்கி, அனைவருக்கும் அன்பையும் மரியாதையும் அளிக்கும் உயர்ந்த ஒரு மனிதனாக, அவனி வல்லபன் திகழ்கிறான். சூழ்ச்சி , வஞ்சம், பகை இவற்றை முறியடித்து வெற்றிவாகை சூடுகிறான். தந்தையான ரணதீரனின் ஆட்சிக் காலத்தில் தொடங்கி, பல்வேறு போர்களைச் சிறப்புடன் நடத்தி, கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பேசப்படும் இவனைப் பற்றிய இந்நாவலை எழுதியுள்ளவர், வரலாற்று நாவலாசிரியர் கானப்ரியன்.
இவரது இந்தப் படைப்பை எமது பதிப்பகம் வழி வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். வாசக அன்பர்கள் படித்து இன்புற்றிட விழைகிறோம்.
– பதிப்பகத்தார்
Reviews
There are no reviews yet.