Description
குமரகுருபரரால் மதுரை நகர் பற்றியும், சிவபெருமான் மீனாட்சி அம்மை குறித்தும் பாடப்பட்டதாக அமைந்துள்ளதே, மதுரைக் கலம்பகமாகும். குலசேகரன் எனும் பாண்டிய மன்னன் காட்டை அழித்து நகரை உருவாக்க முனைந்து பூசை செய்தபோது, சிவனது அருளால் அவர் சடைமுடியின் நிலவில் இருந்து அமுதம் பெருகி நகர் முழுவதும் பரவி மதுரமயமாகியது. மதுரை எனப் பெயர் பெற்றது என மதுரை தோன்றிய வரலாறு குறித்து இந்நூல் கூறுகிறது. மதுரையில்
வீற்றிருக்கும் பெருமானையும், அம்மையையும் போற்றி வணங்கி, சிவனின் பல்வேறு திருவிளையாடல்களை இந்நூல் எடுத்துரைக்கிறது.
மதுரை நகரின் வீதிகளில் பெருமான் வளையல் விற்ற செய்தி, ஏமநாதன் எனும் பாடகனை வெற்றிக் கொண்டது, அரிமர்த்தன பாண்டியனிடம் பிரம்படி பட்டது, சண்டேசுவரர்க்கு அருளியது, ஐராவத யானைக்கு அருளியது என வரும் பல திருவிளையாடல்கள் மூலம் இறைவனது புகழை, மேன்மையை விளக்குகிறது. மதுரைச் சொக்கநாதர் மீது காதல் கொண்ட தலைவி ஒருத்தி மேகத்தைத் தூதாக விடுத்துத் தன் காதலைத் தெரிவிக்கும் காட்சியும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்று பறவை, கிளி விடு தூது ஆகியனவும் இந்நூலில் உள்ளன. மதுரை நகரின் மகளிர் அம்மானை ஆடும் அழகையும் இந்நூல் வருணிக்கிறது. இவ்வாறு மதுரை நகரையும், பெருமான் பெருமையையும் இணைத்துக் கலம்பக மாலையாகப் பெருமானுக்குச் சூட்டியிருக்கிறார் குமரகுருபரர்.
இந்த அரிய நூலுக்கு எளிய நடையில் உரை எழுதி, ஆங்காங்கே புராணக் கதைகளையும் விளக்கியிருக்கிறார் முனைவர் கதிர்முருகு அவர்கள்.








Reviews
There are no reviews yet.